353. பகல்பூரின் கற்கால மனிதர்கள்
சமீபத்தில், ஒரு வன்முறை கூட்டத்தின் பிடியில் சிக்கிய ஒரு திருடன் மீது நடந்தேறிய கொடூர வன்முறை பற்றிய செய்தியை வாசித்திருப்பீர்கள், சம்பவம் குறித்த காட்சிகளை டிவியில் பார்த்திருப்பீர்கள். Instant Justice என்ற வகையில் வழங்கப்பட்ட அந்த கொடூர அநீதிக்கு காவலரும் துணை போன கொடுமையைப் பார்த்தபோது, சூப்பர் பவர் என்ற தகுதியை நோக்கி நம் நாடு முன்னேறி கொண்டிருந்தாலும், மனோபாவத்தில் கற்காலத்தை நோக்கி பயணிப்பதாகவே தோன்றியது!
ஔரங்கசீப் என்ற இளைஞர், பகல்பூரில் ஓர் ஆலயத்தின் அருகே, ஒரு பெண்மணியின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியபோது பிடிபட்டதாகக் கூறி, ஒரு வன்முறைக் கூட்டம் அவரது கைகளை பின்புறம் கட்டி, அவரை நையப்புடைத்தது. அவரது மார்பிலும், வயிற்றிலும், முகத்திலும், முதுகிலும் மீண்டும் மீண்டும் எட்டி உதைத்து சித்திரவதை செய்ததை (CNN-IBN, NDTV) டிவியில் பார்த்தபோது, நிஜமாகவே உள்ளம் கலங்கி விட்டது. என்ன மாதிரி Mob Mentality இது!
யாரோ அழைத்து, அங்கு வந்த இரு போலீஸார், ஔரங்கசீபை அந்த வன்முறை கும்பலின் பிடியிலிருந்து மீட்பதை விடுத்து, தங்கள் பங்குக்கு, அவரது கைகளை ஒரு இருசக்கர வாகனத்தின் பின்புறம் கட்டி, வாகனத்தில் வலம் வந்தது கொடூரத்தின் உச்சம்! அங்கு நடந்த வன்முறையை ஒருவர் கூட தடுக்க முன்வராததோடு, பலரும் கை தட்டி ஆரவாரத்தோடு அதை ரசித்ததை என்னவென்று சொல்ல!
இக்காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த CNN-IBN மற்றும் NDTV தொலைக்காட்சியினர் கூட, போலீஸின் இந்த செயலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மீடியாக்காரர் ஒருவருக்கு ஒரு சின்ன பாதிப்பு என்றால், இவர்கள் என்ன குதி குதிப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்! நிச்சயம் இவர்களால் அன்று உயர் போலீஸ் அதிகாரிகளை வன்முறை நடந்த இடத்திற்கு வரவழைத்திருக்க முடியும். ஏதோ படப்பிடிப்பு போல, கட்டற்ற வன்முறை அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.
அந்த பரிதாபத்துக்குரிய இளைஞர், உடல் முழுதும் ரத்த காயங்களோடு நினைவிழந்து போகும் வரை, வன்முறை தொடர்ந்தது! அவ்விளைஞர் மருத்துவமனை ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக மறுநாள் செய்தி வந்தது. பொதுமக்களின் ரத்த வேட்கைக்கும், பீகார் காவல் துறையில் பரவி விட்ட அழுகலுக்கும் சாட்சியாக இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது!
1980-இல் பகல்பூரில் போலீஸார் 31 கைதிகளின் கண்களில் திராவகத்தை ஊற்றிக் குருடாக்கிய பயங்கர நிகழ்வும், 1989-இல் அங்கு நடந்த மதக்கலவரத்தில் கிட்டத்தட்ட 1000 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது! அதாவது, 27 வருடங்களில் பகல்பூரின் கற்காலத்தை ஒட்டிய மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை! சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே, சட்டத்தை உடைக்கும்போது, நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது :-(
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 353 ***
4 மறுமொழிகள்:
என்பது தெளிவாகப் புலப்படுகிறது :-(
வருத்தப்பட வைக்கும் விஷயம்.
Test !
வடுவூர் குமார்,
நன்றி.
எ.அ.பாலா
பகல்பூர் செய்தி பார்த்து பதறிப்
போனேன் நானும், பாரினில் உயர்
பாரத நாட்டினிலா,
பார் அதி மூடச்செயலிது
எனக் கொண்டேன் ஏமாற்றம்.
:-(
Post a Comment